நண்பர்களே,
வணக்கம். என்றேனும் ஒரு தொலைதூர நாளிலோ, அல்லது சுமாரான தூரத்து நாளிலோ, OTT சினிமாக்களையும் ; ரீல்ஸ்களையும் பார்த்து அலுத்துப் போய், விட்டத்தை வெறித்திடும் வேளையொன்று புலர்ந்ததெனில் – பழசையெல்லாம் அசை போடும் ஆசை எனக்குத் துளிர்க்கக்கூடும் ! அப்படியொரு அவா தலைதூக்கிடும் பட்சத்தில் அந்த flashback படலத்தினில் சர்வ நிச்சயமாய் இந்த 2023 ஒரு உச்ச இடத்தைப் பிடித்திடும் என்பேன் ! Simply becos இதுவொரு அசாத்திய ஆண்டாக இருந்து வந்துள்ளது – எக்கச்சக்க விதங்களில் !!
ஏற்கனவே சொல்லியாச்சு – நடப்பாண்டின் ரெகார்ட் இதழ்களின் எண்ணிக்கை பற்றியும், பக்கங்கள் பற்றியும் ! So காத்துள்ள புத்தாண்டு முதல் ‘நறுக்’ என்ற பாணிகளுக்கு மாற்றம் காணவிருக்கிறோம் என்ற குஷி அடிமனசில் அலையடிக்க, இந்த டிசம்பரை லைட்டாகத் தாண்டி விடலாமென்ற நம்பிக்கையோடு திரிந்து கொண்டிருந்தேன் !! “டிசம்பரின் நடுவாக்கில் ஏஜெண்ட் சிஸ்கோவின் டபுள் ஆல்பம் + விங்-கமாண்டர் ஜார்ஜின் தலையணை உசர தொகுப்போடு 2023-க்கு சுபம் போடுறோம் ; ஹேப்பியா ஜனவரி 2024 க்கான முஸ்தீபுகளில் இறங்குகிறோம்” – என்பதே மைண்ட்வாய்ஸ் ! And வி.க.ஜா. தொகுப்புக்கு கருணையானந்தம் அங்கிள் பேனா பிடித்திருக்க, ஒன்றுக்கு, இரண்டாய் நம் நண்பர்கள் அதனில் பிழைதிருத்தங்களும் போட்டிருந்தனர் ! So அக்கட எனக்கு வேலை கிடையாது ; சிஸ்கோ மாத்திரமே எனது பொறுப்பு என்றெண்ணியிருந்தேன் ! பக்க வரிசைகளைப் போட்டுக் கொடுத்துவிட்டு அச்சுக்குத் தயார் செய்யப் பணித்து விட்டு, டின்டின் மல்லுக்கட்டுக்களின் இறுதி stretch-ல் புரண்டு கொண்டிருந்தேன் !
மைதீன் மண்டையை லேசாய் சொறிந்தபடிக்கே, “அங்க அங்க கொஞ்சம் டயலாக்ஸ் மட்டும் இங்கிலீஷிலேயே இருக்குணாச்சி ; எழுதி தரீங்களா ?” என்று கேட்டான் ! அநியாயத்துக்கு நல்ல மூடில் இருக்க, “புஹாஹாஹா…ஒண்ணு ரெண்டு தானே இருக்கும்…கொண்டு வாப்பா !” என்றேன், “பூ மிதிக்க” குஷியாய் சம்மதம் சொன்ன நம்ம கவுண்டரைப் போல !! சித்த நேரத்தில் ஒரு ரெண்டு டஜன் பக்கங்களை முன்னே கொண்டு வந்து அடுக்கினான் ! லைட்டாய் கிலியடிக்க, பக்கங்களைப் புரட்டினால், அந்த ’60s காலகட்ட context-ல் வந்திருக்கக்கூடிய ஓரிரு வசனங்கள் புரியாமல் அங்கிள் ஆங்காங்கே skip செய்திருந்த வசனங்கள் அவை என்று புரிந்தது ! ரைட்டு..அவற்றை மட்டும் எழுதிக் கொடுத்து விட்டு சிஸ்கோவோடு அன்னம் தண்ணி புழங்கப் போகலாமென்று எண்ணியபடியே அந்தப் பக்கங்களைப் படித்தால் – தலையும் புரியலை ; வாலும் புரியலை ! இந்தப் பயபுள்ள வில்லனா ? அல்லக்கையா ? ஜார்ஜோட ஆளா ? கதையின் முன்பக்கங்களில் யார் யாருக்கு – என்ன ஸ்பெல்லிங்குடன் பெயர்கள் இடப்பட்டுள்ளன ? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தந்தக் கதையினை முழுசாய் வாசிப்பது அத்தியாவசியம் என்பது உறைத்தது ! முன்னூற்றி அறுபது பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் ஆங்கிலக் கதைகளை வாசித்திருந்தவன், தமிழில் மேலோட்டமாய் பார்வையினை ஓடவிட்டிருந்ததோடு சரி ! ஆனால் அந்த விடுபட்ட டயலாக்குகளை எழுதும் பொருட்டு, குறைந்த பட்சமாய் நாலைந்து கதைகளையாவது படிக்க வேண்டியிருக்கும் என்பது புரிந்தது ! “இன்னிக்கி மழை ; இஸ்கூல் லீவு என்று காலையில் கேட்டு செம குஷியாகிவிட்டு, எட்டுமணிவாக்கில் – இல்லே…லீவு இல்லே…ஸ்கூலுக்கு கிளம்பு” என்று கேட்க நேரிடும் போது பசங்களுக்கு முகம் எப்படி அஷ்டகோணலாகுமோ, அது போல நம்ம வதனமும் லைட்டா கோணிட ஆரம்பித்தது ! ‘தம்’ கட்டி விட்டு, முதல் கதைக்குள் புகுந்தேன் – and அது தான் “நெப்போலியன் பொக்கிஷம்” ! எனக்கு இந்த இதழ் ஒரிஜினலாக முத்து காமிக்சில் வெளியான வேளை குத்துமதிப்பாக நினைவுள்ளது – because பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இயற்கை எய்திய நாளில் தான் இந்த புக்கும் தயாராகி இருந்தது – if reminiscence serves me lawful !
ஹிட்டடிச்ச கதையாச்சே ?! ‘பச்சக்’ன்னு முடிச்சிடலாமென்று நம்பி உள்ளுக்குள் இறங்கினால், லைட் லைட்டாக நெருடல்கள் – ஆங்காங்கே தென்பட்ட எழுத்துப் பிழைகள் கண்ணில்பட்ட போது !! இப்போதெல்லாம், வாரத்தின் பாதி நாட்களில் எனது காலைகள் புலர்வது, நமது நண்பரொருவரின் பிழைபார்க்கும் படலங்களோடே ! வாட்சப்பில் போட்டோ எடுத்து அனுப்பியிருப்பார் – ‘இந்த புக்கில்.,.இந்தப் பக்கத்தில்…இந்தக் கட்டத்தில்…இந்த ஆளு பேசுறதில் இந்த “று” க்கு பதிலா இந்த “ரு” வந்திருக்கு ” என்ற தகவலோடு ! நெப்போலியன் பொக்கிஷத்தினில் சரளமாய்த் தென்பட்ட எழுத்துப் பிழைகளைப் பார்க்கப் பார்க்க – அடுத்த ரெண்டு மாசங்களின் காலைகளுக்கான பிழை கோட்டா அங்கே இறைந்து கிடக்கும் பீலிங்கே மேலோங்கியது ! ‘செத்தாண்டா சேகரு” என்ற வசனம் மட்டுமே தலைக்குள் ஒலித்தது – ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமோ ? என்ற சந்தேகம் புலர்ந்த நொடியில் ! ஒரு கதையில் இருந்த சீர் செய்யப்பட்டிரா spelling mistakes மீதக் கதைகளிலும் இருக்கக்கூடுமோ ? என்ற பீதியில் ஒவ்வொரு கதையினையும் அவசர அவசரமாய் எடுத்துப் பார்த்தால் – எனது பயங்கள் ஊர்ஜிதம் கண்டிருந்தன ! எல்லாக் கதைகளிலும் எழுத்துப் பிழைகள் ; ஒற்றுப் பிழைகள் சரளமாய் உலா வந்து கொண்டிருந்தன ! தொடர்ந்த ஒரு வாரம், நாக்கால் ஆபீசை சுத்தம் செய்யாத குறை தான் ; because அத்தனை கதைகளையும், அத்தனை பக்கங்களையும் நெட்டுரு போட வேண்டியிருந்தது ! To be frank – டிசம்பரின் நடுவாக்குக்கு இந்த இதழினை நான் அட்டவணைக்குள் புகுத்தி இருந்ததே – எனக்கு இதனில் அதிகப் பணிகள் இராதென்ற நம்பிக்கையில் தான் ! ஆனால் ‘கெக்கேபிக்கே’ என்று விதியார் சிரிக்கும் வேளைகளில் யார் தான் என்ன செய்ய முடியும் ? Phewwwwwwwwwwww !! முழுசாய் ஒரு வாரம் டின்டினுடன் ; அதனைத் தொடர்ந்த இன்னொரு வாரம் ஜார்ஜோடு !! இதோ – இந்த விங் கமாண்டரின் அட்டைப்பட preview guys :
மொத்தம் 10 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு பற்றிச் சொல்வதானால் – கிளாசிக் ரசிகர்களுக்கொரு விருந்து !! முன்னாட்களில் வீட்டில் உப்புக்கண்டம் என்று போட்டு வைத்திருப்பார்கள் – ‘தல’ டெக்ஸ் கதைகளில் வரும் ‘பெம்மிக்கன்’ போல ! குழம்பு, கூட்டு எதுவும் செய்யத் தோதுப்படாத நாட்களில் உறியில் தொங்கும் உப்புக் கண்டத்திலிருந்து நாலு துண்டுகளைத் தூக்கிப் போட்டு வதக்கி, சாப்பாட்டோடு கடித்துக் கொள்வார்கள் ! அதே போல, கணிசக்கதைகள் உள்ள இந்தத் தொகுப்பிலிருந்து ரெண்டு ரெண்டு கதைகளையாய் சாவகாசமாய் எடுத்து ராவுக்கு வாசிக்க வைத்துக் கொண்டால் சூப்பராக இருக்கும் என்பேன் ! Of route கதைகள் அனைத்துமே leisurely 60’s & early ’70s சார்ந்தவை எனும் போது அந்நாட்களின் புராதனம் தவிர்க்க இயலாது போகும் ! அதனை இடராகக் கருதிடாது முன்னேறினால் சுலப வாசிப்புக்கு பேஷாய் region ஆகிடும் ! இன்னமும் ஒரேயொரு ஆல்பம் மாத்திரமே காத்துள்ளது இந்த மெகா தொகுப்பு template-ல் ; அதன் பின்பாய் வரவுள்ள கதைகளில் இந்த பாணி தொடர்ந்திடாது ! So இருக்கும் போதே இதனை ரசித்துக் கொள்வோமே guys ?
ஒரு மார்க்கமாய் “பூமிதித்துப் புண்ணாகிய” கவுண்டராட்டம் சிஸ்கோவுக்குள் தள்ளாடிப் போய் விழுந்தால் – இதமாய் ; சமகால ஆக்ஷன் த்ரில்லரில் இந்த பிரெஞ்சு ஏஜெண்ட் ஊடு கட்டியடிப்பதைக் காண முடிந்தது ! 55 ஆண்டுகளுக்கு முன்பான ஒருவண்டிக் கதைகளிலிருந்து, நேராக ஒரு 2020’s த்ரில்லருக்குள் குதிக்கும் அனுபவம் – வார்த்தைகளுக்குள் அடைபடா ரகம் ! And இம்முறையோ சிஸ்கோ களமாடுவது நியூ யார்க்கில் !! அரசியல் சதுரங்கங்கள் ; மைக்கின் முன்னே ஏதேதோ பேசும் அரசின் அதிபர்களின் பின்னணிக் கணக்குகள் ; சர்வதேச அரங்கினில் ஒவ்வொரு வினைக்கும் ஆற்றப்படும் எதிர்வினை – என்று “கலாஷ்னிகோவ் காதல்” சொல்ல முனையும் கதைகள் ஓராயிரம் ! மின்னல் கீற்றுக்களாய் ஆக்ஷன் blocks சகிதம் தடதடக்கும் இந்த டபுள் ஆல்பத்தின் இறுதியில் சிஸ்கோவை தூக்கி ஜெயிலுக்குள் கடாசி விடுகிறார்கள் & அதன் அடுத்த சுற்று அங்கிருந்தே துவக்கம் காண்கிறது ! So உங்களின் வோட்டெடுப்பில் இந்த மனுஷன் தேர்வாகியிருப்பதில் ரொம்பவே மகிழ்கிறேன் ; becos அடுத்த சுற்றை சூட்டோடு சூடாய் ஆரம்பித்து விட அது வழி ஏற்படுத்தித் தந்துள்ளதே !! ஜெட் வேகத்தில் பறக்கும் பக்கங்களுக்கு பேனா பிடிப்பது நோவே தெரிந்திடா ஜாலி அனுபவமாகிட, கொஞ்சமாய் அக்கடா என்று மூச்சை விட்டுக்கொண்டேன் ! Here is the preview :
- டின்டின்
- டெக்ஸ் வில்லர்
- வேதாள மாயாத்மா (கலரில்)
- லார்கோ வின்ச்