நண்பர்களே,
வணக்கம். லயனின் நாற்பதாவது ஆண்டும் அதுவுமாய், இன்னமும் வாடகைச் சைக்கிளில் ஏறி ரிவர்ஸ் கியரை அமுக்காமல் இருக்கோமே ? என்ற நினைப்பு நேத்திக்குத் தான் மனதில் நிழலாடியது ! ரைட்டு…..மார்ச் இதழ்களுக்கு இன்னமும் நேரமிருக்க, பிப்ரவரியின் rapidly read இதழ்கள் சார்ந்த அலசல்களினூடே, பிப்ரவரிக்குள்ளேயே ஒரு flashback ட்ரிப் போய் வந்துப்புடலாமே ? என்று தோன்றியது ! So here goes :
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பானதொரு பிப்ரவரி அது ! கிட்டத்தட்ட 10 மாதங்களாகி இருந்தன – நான் ப்ளஸ் டூவுக்கு மங்களம் பாடி ! நமக்கு மேற்கொண்டு கல்வி கற்க அஞ்சல்வழி மட்டுமே இனி சாத்தியம் என்ற கசப்பான யதார்த்தத்தை ஒரு மாதிரியாய் மெதுமெதுவாக விழுங்கப் பழகிக் கொண்டிருந்த நாட்களவை ! அப்பாவின் தொழிலோ ICU-வில் குற்றுயிரும், குலையுயிருமாக தொங்கி கொண்டிருக்க, அங்கு சென்று பொழுதைக் கழிக்கப் பெருசாய் வழிகள் இருக்கவில்லை ! நெதத்துக்கும் ஒரு கடன்காரச் சேட்டு தமிழைக் கொத்துக்கறி போட்டபடிக்கே, பணத்தைக் கேட்டுக் கூப்பாடு போடும் அந்த மாமூலை சகிக்க இயலாது ! முத்து காமிக்சின் ஆபீஸிலோ ஆளாளுக்கு ‘ஜிலோ’வென்று காற்று வாங்கிக் கொண்டிருப்பார்கள் – ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து அந்த மாதத்து இதழ் அச்சிட பேப்பர் வாங்கித் தர மொதலாளிக்குத் தீருமா ? என்ற வினாவோடே ! So அங்கேயும் போய் பொழுதை ஓட்ட ரசிக்காது ! பற்றாக்குறைக்கு “முத்து காமிக்ஸ் வாரமலர்” எனும் மெகா பல்பை நான் வாங்கிய நாள் முதலாய் அங்கே போகும் ஆசையே எனக்கு அறவே இல்லாது போயிருந்தது ! So விடிஞ்சு முழிச்சு எழுந்து, குளித்துக் கிளம்பி, வள்ளுவர் கோட்டத்து நிழலில் கட்டையைச் சாய்க்கும் கவுண்டரைப் போலவே, தினத்துக்கும் பொழுதை கடத்த குட்டிக் கரணம் அடிக்க வேண்டியிருந்தது !
நம்ம எதிர்காலத் திட்டம் – ஒரு பூந்தளிர் போல ; ஒரு கோகுலம் போல – ஒரு சிறுவர் இதழை உருவாக்கி வெளியிடுவது ! And அந்த இதழுக்காக பெயரினை டெல்லியில் உள்ள செய்தித்தாட்கள் பதிவகத்தில் பதிந்து விட்டு வேலையை ஆரம்பிப்பது என்பதே திட்டம் ! அந்த அப்ளிகேஷனில் ஒன்றுக்கு மூன்றாய் பெயர்களை நாம் வரிசைப்படுத்தி எழுதி அனுப்பிடலாம் ; ஒன்று இல்லாங்காட்டி அடுத்ததை வாங்கிக் கொள்ள ஏதுவாக ! நான் முதல் சாய்ஸாக “டிங்-டாங்” ; இரண்டாவது பெயர்த் தேர்வாக “புதையல்” & மூன்றாம் தேர்வாக “பொக்கிஷம்”(no longer certain about # 3) என்று வரிசைப்படுத்தி நவம்பர் 1983-லேயே அனுப்பி விட்டு தினம்தோறும் தபால்காரரை வழி மேல் விழி வைத்தபடிக்கே எதிர்பார்த்திருப்பேன் ! ஊரில் இருக்கும் அம்புட்டுப் பசங்களின் கல்யாணப் பத்திரிகைகளும் தபாலில் வரும் ; அப்பாவின் பெயர் போட்டு “முஜே பைசா சாஹியே…பைசா…பைசா…!” என்று அன்பான நினைவூட்டல்கள் உச்சஸ்தாயியில் வரும் ; ஆனால் டில்லியிலிருந்து நான் எதிர்பார்த்துக் கிடந்த ஒப்புதல் கடுதாசி மாத்திரம் வந்த பாடே இல்லை ! அட – அந்தப் பதிவு இல்லாட்டி தபால் கட்டணங்களும், ரயில்வே கட்டணங்களும் மட்டுமே சலுகைகளின்றிப் போயிருக்கும் ; மற்றபடிக்கு வண்டியைக் கிளப்பியிருக்கலாம் தான் ! ஆனால் அன்றைய அந்த 16.5 வயது அறிவாளிக்கு எல்லாமே முறைப்படிச் செய்திட வேண்டுமென்ற எண்ணம் ; அவா ! அது மாத்திரமன்றி, எங்கே ஆரம்பிப்பது ? எப்படி திட்டமிடுவது ? பணத்துக்கு என்ன செய்வது ? என்ற கேள்விகள் உள்ளுக்குள் மிரட்டிக் கொண்டிருக்க, “இதோ – டில்லியிலிருந்து பதிவு வருது…. வருது….” என்றபடிக்கே நாட்களைக் கடத்திப் போவது எனது இயலாமையை பூசி மெழுக உதவியதொரு திரையாகவும் செயல்பட்டது என்பதே நிஜம் ! ஆனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாய்க் காத்திருந்து கண்கள் பூத்ததே மிச்சம் என்றான நிலையில், ஒரு செம காண்டான மதியத்தில் தான் – “ச்சீ..சீ…அந்த சிறார் இதழ் சங்காத்தமே வாணாம் ; மரியாதையாய் முத்து காமிக்ஸைப் போல ஒரு முழுநீள இதழைத் திட்டமிடலாம் ! என்ற பெரும் சிந்தனை எழுந்தது ! So ஒரு சுபயோக சுபதின பிப்ரவரியில் மறுக்கா ஒரு விண்ணப்பம் பறந்தது டில்லிக்கு – சாய்ஸ் # 1 : லயன் காமிக்ஸ் ; சாய்ஸ் # 2 : டைகர் காமிக்ஸ் ; தேர்வு # 3 : ஏதோவொரு பெயர் – மறந்து போச்சு !! ஆனால் இம்முறை வேலைகளை ஆரம்பிச்சிடலாம் – பெயருக்கான அனுமதி வந்த பிற்பாடு ரெடியாய் இருக்கக்கூடிய மாவைக் கொண்டு சுடச் சுட வடை சுட்டுக்கொள்ளலாம் என்றும் தீர்மானித்தேன் !
So நமது இன்றைய பயணத்தின் ஒரு தம்மாத்துண்டு துவக்கப் புள்ளி இடப்பட்டது 40 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பிப்ரவரியினில் தான் ! சிறார் இதழினில் தொடராக வெளியிடுவதற்கென, அதற்கு முன்னமே வாங்கியிருந்த க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டின் முதல் ஆறு பக்கங்களை விடிய விடிய ரசித்துக் கொண்டே இருந்ததன் பலனுமே ஒரு முழுநீள காமிக்ஸ் இதழ் மீது எனக்கு மையல் எழுந்திருந்ததற்கு காரணம் என்பேன் ! எது எப்படியோ – அன்றைக்கு டில்லியில் சிறார் இதழ்களுக்கான எனது விண்ணப்பங்களை மடித்து காது குடைய ஏதோவொரு குமாஸ்தா மாமா முனைந்திருக்காட்டி – “லயன் காமிக்ஸ்” என்றதொரு சமாச்சாரம் ஜனித்திருக்கவே ஜனித்திருக்காதோ – தெரியாது !
ஒற்றை ஆண்டினில் தான் எத்தனை-எத்தனை மாற்றங்கள் இறைவா ?! என்று தோன்றுகிறது – 1985 பிப்ரவரியினை அசைபோடும் பொழுதினில் ! ஜூலை 1984-ல் கத்திமுனையில் மாடஸ்டியும், நானும் களமிறங்கியிருக்க, நம்ம சிரசாசன SMS காரரான ஸ்பைடராரின் புண்ணியத்தில் கொஞ்ச காலத்திலேயே வண்டி டாப் கியரில் ஓடத் துவங்கியிருந்தது ! பகீரென்று பாக்கெட் சைசுக்கு பல்டி ; ஜஜாய்ங்கென்று மாக்சி சைசுக்கு ஜம்ப் ; இரும்பு மனுஷன் ; தீவாளி மலர் ; பொங்கல் மலர் என்ற ரகளைகள் தொடர்ந்திட, நமது அந்நாட்களின் வங்கிக்கணக்கில் இருபதாயிரத்துக்கும் மேலே பணம் கிடக்கும் எந்நேரமும் ! (அதைக் கொண்டு அமேசான் ஓனரிடம் அவரது கம்பெனியை விலை பேச முடிஞ்சிருக்காட்டியும், பக்கத்திலேயே, எதிர்த்தாலேயோ இருக்கக்கூடிய ஒரு சஹாராவையோ ; ஒரு காங்கோவையோ அந்நாட்களில் வாங்கியிருக்கக்கூடும் guys !!) பேப்பர் ஸ்டார்க்காரர் பில் போட்ட ஈரம் காய்வதற்குள் நம்ம முழியாங்கண்ண தொழிலதிபர் ‘பச்சக்’ என்று செக்கைக் கிழித்திருப்பார் ! கடன்ஸ் கேக்கமாட்டோம் ; அதே போல நாங்களும் கடன்ஸ் தர மாட்டோமுங்கோ – என்பதில் இந்தச் சொடலமுத்து படு ஸ்ட்ரிக்ட்டாக இருந்த நாட்களவை ! யாராச்சும் ஏஜெண்ட்ஸ் டிராப்ட் அனுப்புவதற்குப் பதிலாய் செக் அனுப்பினால் போதும் – மறு நொடியே கண்சிவந்து ; காது வழியாய்ப் புகை கக்கியபடியே அதனைத் திருப்பி அனுப்பிடுவோம் ! அந்தப் பாவத்துக்கெல்லாம் சேர்த்தோ என்னவோ – உள்நாடு மாத்திரமன்றி, வெளிநாடு வரையிலும் நீண்டு செல்கிறது இன்றைய நமது நிலுவைச் சிட்டைகள் ! Phew !!
பிப்ரவரி 1985 எனது நினைவில் நிற்க ஒரு முக்கிய காரணம் உண்டு ! மாடஸ்டி…ஸ்பைடர்…ஆர்ச்சி….மீட்போர் ஸ்தாபனம் – என்று 4 நாயக / நாயகியர் நமது அணிவகுப்பில் இருந்தனர் ! ஆனால் நமக்குத் தான் புதுசாய்க் கதைகளைப் பார்த்தால் வாய் விட்டம் வரைக்கும் பிளக்குமே ? இன்டர்நெட்டெல்லாம் இல்லாத அந்நாட்களில் கைவசமிருக்கும் புக்ஸ் ; பழைய காமிக்ஸ் இதழ்களை உருட்டி உருட்டியே எதையேனும் தேடிப்பிடிக்க அவசியமாகிடுவது வழக்கம் ! அப்படியொரு தேடலின் போது கண்ணில் பட்டது தான் MASTERSPY என்றதொரு Fleetway கதை வரிசை ! “டைகர் காமிக்ஸ்” என்ற Fleetway வாராந்திர இதழில் தொடராய் வந்து கொண்டிருந்த C.I.D ஜான் மாஸ்டரின் சாகசம் அது ! ராணி காமிக்ஸ் செம ஜாம்பவான்களாய் தமிழ் காமிக்ஸ் உலகினில் அமர்ந்து, ஆக்ரமித்து வந்த நாட்களவை ! சிக்கல் என்னவெனில் நாமும் சரி, அவர்களும் சரி, அதே இந்திய முகவர் மூலமாகத் தான் கதைகளைக் கொள்முதல் செய்து கொண்டிருந்தோம் ! “ரெண்டாயிரம்” என்றால் நான் “ரெ-ண்-டா-யி-ர-மா-ஆஆ” என்று வாயைப் பிளப்பேன் ; ஆனால் ராணியிலோ ‘சொய்ங்’ என்று payment அனுப்பி விடுவார்கள் ! என் கையில் காசு இருந்தாலும், அரையணா..காலணா என்று கணக்குப் பார்த்துச் செலவிடும் எனது சுபாவம் இங்குள்ள முகவருக்கு அவ்வப்போது எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு ! So புதுசாய் அந்த MASTERSPY கதைவரிசையினைத் தோண்டிப் பிடித்து , இலண்டனிலிருந்து ஆர்டர் செய்து வரவழைக்குமாறு இந்திய ஏஜெண்டிடம் கோரிய சமயத்தில் லைட்டாக நெருடியது ! “ஆஹா….இந்தக் கதைகளை இவர்பாட்டுக்கு ராணி காமிக்ஸ் கண்ணில் காட்டிப்புட்டால், நொடியில் வாங்கிப்புடுவார்கள் ; நாம சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போலாகிடுமே !!” என்று பயம் உலுக்கியது !
ஜான் மாஸ்டரின் கதைகளை அவர் வரவழைத்திட்டார் தான் – ஒன்றுக்கு இரண்டாக & அந்த இரண்டாம் அத்தியாயம் செம நீளமானதும் கூட !! ஓலை ஒன்று வந்தது அஞ்சலில் : “இப்போல்லாம் ஏர்-மெயில் சார்ஜஸ் கூடிப் போச்சு ; இலண்டனிலேர்ந்து மொத்தமாய் வாங்கினா தான் கட்டுப்படி ஆகுது ! So நீ ஒரே நேரத்திலே மொத்தத்தையும் வாங்கிக்கிட்டா தேவலாம் !” என்று இருந்தது ! அந்த லெட்டரின் குறியீடு நன்றாகவே புரிந்தது எனக்கு – “மொத்தமா வாங்கிக்க பைசாவை புரட்ட முடிஞ்சா இது ஒனக்கு ; இல்லாங்காட்டி நஹி !” என்பதாக ! “தவிர,ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த Loss of life of a Jester என்ற மாடஸ்டி கதையும் (மரணக் கோட்டை) ; ஸ்பைடரின் The Scarecrow’s Revenge (பழி வாங்கும் பொம்மை)கதையும் ரெடியாக உள்ளன ; அவற்றையும் சேர்த்தே வாங்கிக்க ஏற்பாடு செய்தால் நலம் !” என்று அந்த மடல் நிறைவுற்றது ! 39 ஆண்டுகளுக்கு முன்னேயான அப்போதைக்கே பல ஆயிரங்களில் மிரட்டியது மொத்த பில் ! எனக்கோ உள்ளுக்குள் ஜுரம் வராத குறை தான் ! அப்போதெல்லாம் லயன் காமிக்ஸ் மாதம் ஒரு முறை மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும் எனும் போது, ஆண்டுக்கு 12 இதழ்கள் ; ஸ்பெஷல்ஸ் ஏதேனும் இருந்தால் ஒண்ணோ , ரெண்டோ சேர்த்து 13 or 14 இதழ்கள் தான் வெளியிட இயலும் ! So அவ்வப்போது பணம் அனுப்பி, அவ்வப்போதைக்கான கதைகளைக் கொள்முதல் செய்து கொண்டாலே மதி ! என்றிருப்பேன் ! தவிர வங்கிக்கணக்கில் பணம் கிடப்பதை தினத்துக்கும் நினைத்து மகிழ்ந்து கொள்வதிலும் ஒரு குடாக்குத்தனமான திருப்தி அப்போது ! இந்தக் கடுதாசிக் கணையோ – நான் பொத்திப் பாதுகாத்து வந்த வாங்கி இருப்புக்கு வெடி வைத்து விடும் போலுமே என்ற பயம் உலுக்கத் துவங்கியது !
ஆனால் அதே சமயம், புதுக் கதையானது ராணிக்கு போக நேரிட்டால் நம்ம கதை கந்தலாகிப் போகுமே என்றும் உள்ளுக்குள் குடைந்தது ! அப்போதெல்லாம் பூர்வீக வீட்டின் ஒரு போர்ஷனில் இயங்கி வந்த நமது ஆபீசுக்கு என்னோடு ரெகுலராய் எனது தாய்வழித் தாத்தாவும் வருவார்கள் & என் கையிலிருந்த ஒவ்வொரு அணாவுமே அவர் தந்த முதலீட்டின் பலனே ! இந்தத் தொழில் சார்ந்த அனுபவம் அவருக்கு கிடையாதே தவிர, மனிதர்களை வாசிப்பதில் ; பொதுவான தொழில் அணுகுமுறைகளில் அவரொரு அசகாயர் ! பேரனின் மொகரை வழக்கத்தை விடவும் கர்ண கொடூரமாய் இருப்பதை சீக்கிரமே உணர்ந்தவர் – “என்னடா விஷயம் ?” என்று கேட்டார் ! நானும் லைட்டாக சமாளித்துப் பார்த்துத் தோற்றவனாய் நிலவரத்தை ஒப்பித்தேன் ! கஞ்சி போட்டு வெளுத்து வாங்கிய வெள்ளைக் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பாவே காலம் முழுக்க தாத்தாவின் டிரஸ் ! சும்மா சொட சொடவென காட்சி தரும் வேஷ்டியில் பணம் வைக்க முடியாதென்பதால், நம்ம தலீவரின் பட்டாப்பெட்டி ஸ்டைலிலான நீளமான உள்டிராயரில் தான் பணமிருக்கும் ! அந்த டிராயருக்குள் கைவிட்டு ஒரு நூறு ரூபாய் கட்டைத் தூக்கி மறு கணம் கையில் திணித்தவர் – “பேங்குக்குப் போயி ஒரு DD எடுத்து அனுப்பிட்டு, ஏஜெண்டுக்கு டெலிகிராம் அடி !” என்றார் ! குனிய வேண்டிய வேளையில் குனிவதும், நிமிர வேண்டிய தருணத்தில் நிமிர்வதும், பாய வேண்டிய சமயத்தில் பாய்வதும், பம்ம வேண்டிய கணத்தில் பம்முவதும், தொழிலின் பன்முகங்கள் என்பதை அன்றைக்கு அவர் எனக்கு செயலில் காட்டியிருந்தார் ! “ஒரு வேகத்தில் இழுத்து ஓடிக்கொண்டிருக்கும் தொழிலில் தொய்வு ஏற்பட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாதுடா” என்று அன்றிரவு எனக்குச் சொன்னார் ! அதற்கு முன்பே டிராப்ட் எடுத்து ரிஜிஸ்டர் தபாலில் போட்டு விட்டு – தந்தி ஆபீசுக்குப் போய் “SENT DD – Rs .______. STOP . ARRANGE TO DESPATCH ALL STORIES URGENTLY. STOP. KIND REGARDS .LION COMICS ” என்று சும்மா கெத்தாய் எக்ஸ்பிரஸ் டெலிகிராம் அனுப்பியிருந்தேன் ! (டெலெக்ராம் என்றால் இன்றைக்கு நீங்கள் பயன்படுத்தி வரும் செயலி அல்ல 2k teens !!) கதைகள் ஒரு கத்தையாக பார்சலில் வந்த தினத்தில் வாயெல்லாம் பல்லாய் நான் திரிந்ததையே தனக்கான வெகுமதியென தாத்தா நினைத்தார்களோ – என்னவோ, அந்தப் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் திரும்ப தா என்று சொல்லக்கூடயில்லை ! கதைகளை மொத்தமாய் வாங்கிடும் ஒரு சொகுசுக்கு, ஒரு வேட்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது அன்றைக்குத் தான் என்பேன் ! இரண்டரை மாதங்களுக்கு முன்பாக தாத்தாவோடே தலைநகருக்குச் சென்று , ஸ்பைடர் கதைகளை அள்ளியிருந்தேன் தான் ; but இந்தக் கொள்முதல் அதை விடவெல்லாம் நிரம்பவே ஜாஸ்தி !
மரணக் கோட்டை
சதி வலை
பழி வாங்கும் பொம்மை
மாஸ்கோவில் மாஸ்டர்
தொடர்ந்த மாதங்களில் சூப்பர் ஹிட் அடித்த மேற்படி கதைகள் ஒவ்வொன்றிலும் தாத்தாவின் அரூப அடையாளம் உண்டு !