நண்பர்களே,
வணக்கம். சுகவீனங்களுடனான நெடியதொரு போராட்டத்தினில் தோல்வியை ஒத்துக் கொண்டு அம்மா இயற்க்கையோடு ஒன்றாகிப் போய் விட்டார்கள் ! கடந்த வியாழனன்று நள்ளிரவுக்கு மேல் எதிர்பாரா நோவுகள் சுனாமியாய் தாக்கிட, அன்று தப்பிய நினைவு இறுதி வரைக்கும் திரும்பவேயில்லை ! ஏதேதோ முயற்சித்தும் இனி செய்வதற்கு ஏதுமில்லை என டாக்டர்களும் திங்களன்று கைவிரித்திட, வீட்டுக்கு அழைத்துச் சென்ற பத்தாவது நிமிடத்தில் அம்மாவின் மூச்சு அடங்கிப் போனது ! கண்ணெதிரே ஒரு ஜீவன் விடைபெறுவதை பார்க்கும் கொடுமையோடு துவங்கிய இந்த வாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என தொடர்ந்த தினங்களில் நீண்டு வந்துள்ளது ! And சகல காரியங்களும் முடிந்த கையோடு இங்கே இப்போது ஆஜராகியுள்ளேன் !
மரணம் இயற்கையின் நியதியே என்றாலும், அதனை மிக நெருக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மிரளச் செய்யும் அனுபவமாய் இருப்பதை மறுக்க மாட்டேன் ! கடந்த ஐந்தாண்டுகளாகவே ஊர் ஊராய், ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாய் அலைவதே அம்மாவின் விதி என்றாகிப் போயிருந்தது. அந்த 5 ஆண்டுகளில் 9 ஆபரேஷன்கள் என்ற ரணகளங்கள் அரங்கேறிய பொழுதுகளில் – ‘இந்த வேதனைக்கு ஒரு நிரந்தர விடுதலை கிட்டினால் தேவலாமே ?‘ என நினைக்கத் தோன்றியது நிஜமே ! ஆனால் அம்மாவின் விரல் தொடும் அண்மையில் அந்த விடுதலை நின்ற போது, அதனை வரவேற்க எங்களுக்குத் திராணியே இருக்கவில்லை தான் ! Nonetheless அனுமதி கேட்டுப் பெற்றுவிட்டெல்லாம் காலன் தனது கடமைகளைச் செய்வதில்லையே ?! வந்தார் & 2 தினங்களுக்கு முன்வரையிலும் ரத்தமும், சன்னமான சதையுமாய் இருந்ததொரு ஜீவனை இன்று போட்டோவில் புன்சிரிக்கும் நினைவாய் உருமாற்றிவிட்டு தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் ! கடைசி காலத்தில் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள் – இனியாவது இன்னல்களின்றி நிம்மதியாய் துயில்வார்கள் என்ற பிரார்த்தனைகளுடன் வழியனுப்பியுள்ளோம் ! புனித மனிடோ காத்தருள்வாராக !
October புக்ஸ் வரும் வாரத்தில் பெரிய தாமதங்களின்றிப் புறப்பட்டு விடும் ! கொஞ்சமாய்ப் பொறுத்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன் all ! God be with us all !